பக்கங்கள்

செவ்வாய், ஜனவரி 18, 2011

திருவுருவ படத்திறப்பு கவிதாஞ்சலி
கடிகையின் சிங்கமே...
கருணையின் துங்கமே...
ஓர்மத்தின் உச்சமே...
ஓய்வறியா பிச்சமே...

ஊரெல்லாம் சர்க்கரை-அது
உனைமட்டும் அண்டவில்லை
மருத்துவர் சொன்னார்;
ஆச்சர்யம்! ஏன்?
நீ எங்களின்
சர்க்கரையானதாலா..

உறவோ...நட்போ....
இனமோ...இயக்கமோ...
நீ வீற்றிருக்காத
விசேடங்கள் உண்டா?

கடைசிவரை தெரியவில்லை...
நீ எந்த வங்கியின்
ஏடிஎம் என்று;
ஆம்...
எங்களுக்கு எப்போதும்
சேவை தடைபடாத
ஏடிஎம் நீதானே!

பலரும் உன்னை ஜீ
என்பர்...
போராட நீ நேதாஜி
வீரம் காட்ட சிவாஜி
சத்தியம் காட்ட காந்திஜி
ஆகவே..
எங்களுக்கு
நீ 3 'ஜீ'

எதையும் எதிர்க்கும்
உனக்கு
எஸ்மா... டெஸ்மா..
அம்மம்மா......
எத்தனை கொடுத்தும்
ஈடாகுமா?

பழனியின் புதல்வனே..
பழநிதியின் முதல்வனே...
வலிந்து நின்ற
வந்தே மாதரமே...
கறுமை கலந்த
செந்தூரப் பொட்டே...

நட்பு சொன்ன
நந்தா விளக்கே...
மகன் பிறந்த சென்னை..
ஆர்வமுடனழைத்தது உன்னை
ஈருருளியிலேயே
ஈட்டி போல் பாய்ந்தாய்

பயம் அறியாத
பயங்கரம் நீ...
இயக்கம் செலுத்திய.
சாரதியே...
முண்டாசு கட்டாத
பாரதியே...

முன்விட்டு பின்பேசும்
உலகில்: நீ
முகத்தின் முன் பேசிய
போர்வாள்
வைசத்திரம் செய்ய
வைகுண்டம் புகுந்தவனே!

மழலைகளைக் கூட
ஒருமையில் அழைக்காத
மனித நேயமே...
ஒற்றையில் போய்வர
உன் வாகனங்கள்
ஒத்துக்கொண்டதுண்டா?

மருத்துவமனையிலிருந்தும்
நீ பேசிய...
" நல்லா இருக்கீங்களா "
தேய்ந்த குரலிலும்
தேக்காய்...தேனாய்..
திரும்பக் கிடைக்குமா?
அந்த- திருவாசகம்.

வெண்மணியில் வேலை
கீழ்வேளூரில் ஜாகை
நாகையில் கைது
சென்னையில் மகன்
டெல்லியில் மறியல்..
ஆக... தேசமே...
உன் வாழ்வில்.
மைல்கல்லாக
இருந்துவிட்டது.

யாருக்கோ... எவருக்கோ...
சண்டை
நமக்கென்னவென்று
நகர்ந்ததுண்டா-நீ
சமரசம் கண்டுதான்
திரும்புவாய்....
ஆனால் - உன்
சட்டைப்பை மட்டும்
பாலையாய் வறண்டிருக்கும்

எந்த விதத்திலாவது
உன்னை பின்பற்ற முடியுமா?
முடியாது....
அதனால்தான்
மரணத்திலும் நீ
மாறுபட்டாயோ

என்றும் நீ
ஆணவமாக இருந்ததில்லை
ஆனால்
ஆவணமாகவே
இருந்திருக்கிறாய்

நீ இருந்தாலும்
எங்களுக்கு நிகழ்காலம்
இல்லாத காலம்
இறந்த காலம்...
பிறருக்காக
கோரிக்கைகள் வைப்பாயே..
உனக்காக
என்றாவது- எதையாவது
கோரியதுண்டா?

ஊரெல்லாம் அழுததே...
உறவெல்லாம் துவண்டதே...
நட்பெல்லாம் குலைந்ததே..
எல்லோரின் ஏக்கத்தையும்
எடுத்துச் செய்வாயே...
எங்களின் வேண்டலாய்
எண்ணிலோர் சொல்கிறோம்
மீளவா.......
எங்களை மீட்கவா...
இதுவும் கோரிக்கைதான்
கோரிக்கைகளுக்கு
போராட- நீ
முதலாய் இருப்பாயல்லவா!

நலம் குன்றிவிட்டோமென
நடப்பில் காட்டாமல்
சிரமத்திற்கிடையிலும்
சிங்கமாய் நடந்தாய்;
அதனால்தான்
ஆத்மா பிரிதலிலும்
அமர்ந்தே இருந்தாயோ?

மரணப்பாதையை
மருத்துவர் சொல்லியும்
மறுத்துப் பேசினாய்
மரிப்பை வீழ்த்த...
ஊரிலும்,உறவிலும்
உனக்கு பவர் அதிகம்
உரிமையை கேட்பதில்
உனக்கு துவர் குறைவு

ஒளிர்ந்து நின்ற
எங்களின்.....
பஞ்சபூதமே...
ஒளிந்து நின்றாலும்
நீ பிரபஞ்சமே...

நீயே நினைவாய்
நீயே நிகழ்வாய்
நீயே நிலையாய்
நீயே நிறைவாய்
நீயே நிழலாய்
விதையாய் விழுந்து
விருட்சமாய் எழுந்து- நீ
வழித்தடமாய்...
வழ்க்கைப்பாடமாய்....
நேற்றும்.....இன்றும்......என்றும்......

உன்னைச் சுவாசிக்கும் ஆசிரிய நண்பர்கள்..
ரெ.சுப்பிரமணியன்
கு.ஜவஹர்மலையப்பன்
க.இரமேஷ்குமார்
மாரி.வேம்பையன்
சு.விஜயகுமாரன்
க.இராஜதுரை
ம.சித்திரவேல