பக்கங்கள்

வியாழன், ஏப்ரல் 26, 2012

திருத்தி அச்சடிக்கப்பட்ட, புதிய பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள், இன்று முதல் மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான புத்தகங்கள், ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின், பள்ளி நிர்வாகங்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தனியார் பள்ளிகளுக்கான விற்பனை, இன்று முதல் நடைபெறும் எனவும், பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

 தி.மு.க., ஆட்சியில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டு, முதலில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு, திட்டம் அமல்படுத்தப்பட்டது. மீதியுள்ள வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டது. பாடப் புத்தகங்களில், கருணாநிதியைப் பற்றியும், தி.மு.க.,வைப் பற்றியும் பல கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததாலும், போதிய அளவிற்கு தரம் இல்லை என்பதாலும், இந்த கருத்துக்கள் நீக்கப்பட்டபின், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தேவையில்லாத பகுதிகள் நீக்கம்: 
இந்நிலையில், ஆசிரியர் பயிற்சி இயக்குனகரம், தேவையில்லாத பகுதிகளை நீக்கம் செய்தும், தேவையான கருத்துக்களை சேர்த்தும், பாடப் புத்தகங்களில் திருத்தம் மேற்கொண்டது. இதன்பின், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இந்தப் புத்தகங்கள், இன்று முதல் மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வருகிறது என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் அறிவித்துள்ளார்.

பாடநூல் கழகம் அறிவிப்பு:
இலவச பாடப் புத்தகங்களைப் பொறுத்தவரை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, அந்தந்த மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள மையங்களுக்கு, அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன. முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்ட பள்ளிகளுக்கு 26ம் தேதி (இன்று) முதல் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானபின், இப்புத்தகங்கள், தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்கும்.

விற்பனைப் பிரிவு: 
விற்பனைக்கான பாடப் புத்தகங்கள் (மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கானது), பாடநூல் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும், மாநிலம் முழுவதும் உள்ள 22 வட்டார அலுவலகங்களிலும், 26ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், பாடநூல் கழக வட்டார அலுவலர்களுடன் இணைந்து, புத்தகங்கள் விற்பனை பணியை மேற்கொள்வர். மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள், அவரவர்களுக்கு தொடர்புடைய மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு, அவர்கள் ஒதுக்கும் நாள் மற்றும் நேரத்தில், பாடப் புத்தகங்களுக்கான தொகையை டிடி.,யாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை பள்ளிகளுக்கு...: 
சென்னையில் அதிகளவில் மெட்ரிக் பள்ளிகள் இருப்பதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் எவ்வித கால தாமதமும் இல்லாமல், உடனடியாக பாடப் புத்தகங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் உள்ள சில பள்ளிகள் ஒருங்கிணைந்து, பாடநூல் கிடங்கில் இருந்து புத்தகங்களை, ஒரு மையத்திற்கு எடுத்துச்சென்று, இதர பள்ளிகளுக்கு பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 28,29 ஆகிய சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பாடநூல் கிடங்குகள் இயங்கும்.

5 சதவீதம் கழிவு: 
புத்தகங்களை தொகுப்பாகவோ அல்லது தனித்தனியாகவோ பெற்றுக்கொள்ளலாம். மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 5 சதவீத கழிவு போக, மீதமுள்ள தொகைக்கு டிடி., கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் வசதிக்காக, பாடநூல்கழக இணையதளத்திலும் (தீதீதீ.tஞுதுtஞணிணிடுஞிணிணூணீ.tண.ணடிஞி.டிண) பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு கோபால் தெரிவித்துள்ளார்.

எல்லாமே 70 ரூபாய் :
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்களும், தனித்தனியாக தலா 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என, பாட நூல் கழகம் அறிவித்துள்ளது. "செட்'டாக வாங்கினால், 350 ரூபாய்.

75 லட்சம் புத்தகங்கள் தயார்! : 

பாடநூல்கழக வட்டாரங்கள் கூறும்போது,""பத்தாம் வகுப்பை, 10 லட்சம் மாணவர்கள் படிப்பார்கள் என கணக்கிட்டு, அதற்கேற்ப பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 75 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. எனவே, பற்றாக்குறை பிரச்னை வரவே வராது. மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள், படிப்படியாக பாடநூல் கழக குடோன்களுக்கு அனுப்பப்படும். மே 15 தேதிக்குள், அனைத்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களும் தயாராகிவிடும்'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...